கருவேப்பிலை வியாபாரி வீட்டில் நகை திருடிய 17 வயது சிறுவன் கைது
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் கருவேப்பிலை வியாபாரி வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் புதுப்பேட்டை அண்ணாவீதியை சேர்ந்தவர் சின்னையன், 27. இவர் விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் கருவேப்பிலை, கொத்தமல்லி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்தாண்டு மே மாதம் 29ம் தேதி காலை வழக்கம்போல், காய்கறி மார்க்கெட்டிற்கு சென்றார்.இவரது குடும்பத்தினரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில், அன்று காலை 11:00 மணியளவில் சின்னையன் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதில், அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, 1 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி., பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.அதில், குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, 17 வயது சிறுவனை கைது செய்தனர்.