வீட்டை பூட்டிய 2 மணி நேரத்தில் 21 சவரன் நகை கொள்ளை சிதம்பரத்தில் பட்டப்பகலில் துணிகரம்
சிதம்பரம் : சிதம்பரம் அருகே, வீட்டை பூட்டிச் சென்ற 2 மணி நேரத்தில், 21 சவரன் நகையை திருடிச் சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை, சித்தன் சாலையை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கஜேந்திரன்,35; வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், நேற்று காலை 8:30 மணிக்கு வீட்டை பூட்டிக் கொண்டு மனைவி மற்றும் குழந்தையோடு மருத்துவமனைக்கு சென்றார். சிகிச்சை முடிந்து காலை 10:30 மணிக்கு வீட்டிற்கு வந்தார்.அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, மர பீரோ உடைந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 21 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் திருடு போயிருந்தது.அண்ணாமலை நகர் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வீட்டை பூட்டிவிட்டு, வெளியில் சென்று, 2 மணி நேரத்தில் வீடு திரும்புவதற்குள் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.