வி.சி., கட்சி நிர்வாகி கொலையில் 3 பேர் கைது முக்கிய குற்றவாளிக்கு எலும்பு முறிவு
நெய்வேலி : நெய்வேலி அருகே வி.சி., கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த கொள்ளிருப்பை சேர்ந்தவர் பழனி மகன் பாலாஜி,29; வி.சி., கட்சியின் மாவட்ட மாணவரணி பொருளாளர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் திருநாவுக்கரசு,26; என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த திருநாவுக்கரசு, பாலாஜியை கத்தியால் குத்தி கொலை செய்தார். புகாரின் பேரில், நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப் பதிந்து திருநாவுக்கரசை தேடி வந்தனர்.நெய்வேலி புதிய அனல் மின் நிலையம் பின்புறம் திரவுபதி அம்மன் கோவில் அருகில் உள்ள சாம்பல் ஏரியில் திருநாவுக்கரசு பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், டி.எஸ்.பி., சபியுல்லா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் அங்கு நேற்று சென்றனர். போலீசை பார்த்ததும் தப்பியோட முயன்ற திருநாவுக்கரசு தவறி விழுந்ததில் வலது முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை கைது செய்து, மருத்துவமனையி்ல் அனுமதித்தனர். இவ்வழக்கில் திருநாவுக்கரசு உறவினர்கள் ஆறுமுகம்,51; மணிகண்டன்,31; ஆகியோரையும் போலீசார் கைது செய்து, செந்தாமரை, திரிசங்கு ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.