சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் 43 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டிலிருந்து இரண்டாவது நாளாக 43 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று விநாடிக்கு 43 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து வெளியேற்றினர். கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பெலாந்துரை அணைக்கட்டிலிருந்து 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், விருத்தாசலம் மணிமுத்தாரில் 10 ஆயிரம் கன தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.இரண்டு ஆறுகளும் கூடலையாத்துாரில் ஒன்றிணைந்து வெள்ளாறு அணைக்கட்டிற்கு வயல்கள் வடிகால் வாய்க்கால்களிலிருந்து வெளியேறும் மழை உபரி நீருடன் மொத்தம் 43 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.வெள்ளாறு அணைக்கட்டிற்கு வரும் தண்ணீரை சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் உத்தரவின் பேரில் பாசனப்பிரிவு உதவி பொறியாளர் படைகாத்தான் மற்றும் பணியாளர்கள் தீவிர கண்காணிப்புடன் அணையிலிருந்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் நேற்று காலை 45 ஆயிரம் கன தண்ணீர் வெளியேற்றினர். மாலை அது, 43 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.