மாவட்டத்தின் கடைக்கோடியில் விளையாட்டு மைதானம் தேவை
ராமநத்தம்:மாவட்டத்தின் கடைக்கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டுமென மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியங்களில், 130 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தடகள போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்தது வருகின்றனர். மேலும், அரசு பள்ளிகளைச் சேர்ந்த ஜூனியர் மற்றும் சீனியர் மாணவ, மாணவிகள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, பதக்கங்களை பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு பெறுகின்ற னர். ஆனால், இப்பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முறையாக பயிற்சி பெற விளையாட்டு மைதானங்கள் ஏதுமில்லை. அரசு பள்ளிகளில் பராமரிப்பின்றி உள்ள விளையாட்டு மைதானங்களில் பயிற்சி பெறும் அவலம் உள்ளது. மேலும், தரமான விளையாட்டு உபகரணங்கள் இல்லாததால் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள் மூலம் மாணவர்கள் பயிற்சி எடுக்கின்றனர். இதனால், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் போது, தங்களின் முழு திறமையை வெளிபடுத்த முடியாமல் மாணவர்கள் வேதனை அடைகின்றனர். எனவே, மாவட்டத்தின் கடைக்கோடியில் அனைத்து வசதிகளும் கூடிய நவீன விளையாட்டு மைதானம் அமைத்து மற்றும் உபகரணங்கள் வழங்க வேண்டுமென அப்பகுதி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.