பெண் வேடமிட்டு விநோத நேர்த்திக்கடன்
கடலுார்; கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சோலைவாழி மாரியம்மன் கோவிலில், ஆண் குழந்தைகளுக்கு பெண் வேடமிட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வெள்ளிமோட்டான் தெரு சோலைவாழி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண் குழந்தை வேண்டும் என அம்மனை நினைத்து விரதம் இருந்து வேண்டும் பெண்கள், அந்த வேண்டுதல் நிறைவேறியதும் ஆண் குழந்தையை கங்கை அம்மனாக நினைத்து, பெண் வேடமிட்டு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்களும் அம்மன் வேடமிட்டு நேர்த்த்திக்கடன் செலுத்தினால் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையும் இருந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆண் குழந்தைகள் பெண் வேடமிட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, பெண்கள் தங்கள் ஆண் குழந்தைகளுக்கு பெண் வேடமிட்டு சோலைவாழி மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். நேர்த்திக்கடன் முடிந்ததும் சோலைவாழி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.