காதல் விவகாரத்தில் பெண்ணின் உறவினர்கள் திடீர் தாக்குதல் சிதரம்பரம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு
சிதம்பரம்: காதல் விவகாரத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்து வாலிபரை, பெண்ணின் உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள புத்துார் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி மகன் முகில்வேந்தன், 25; கார் டிரைவர். இவரும், சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சிதம்பரத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணும் காதலித்தனர். இருவரும் நெருங்கி பழகியதில், பெண் கர்ப்பமானார். இந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதற்கு முகில்வேந்தன் மறுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஜெயசீலி, இருவரிடமும் நேற்று விசாரணை நடத்தினார். அப்போது, பெண்ணின் தரப்பினர் 10க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்திற்குள் திடீரென புகுந்து முகில்வேந்தனை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு நிலவியது. இதனை தடுக்க வந்த சப் இன்ஸ்பெக்டர் ஜெயசீலிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, இருதரப்பையும் போலீசார், காவல் நிலையத்தில் இருந்து வெளியேற்றி காவல் நிலையத்தை பூட்டினார். மகளிர் காவல் நிலையத்தில் இரு தரப்பினர் தாக்கி கொண்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.