பள்ளிகளில் ஆதார் புதுப்பித்தல் பணி... தீவிரம்; 2 மாதத்தில் முடிக்க கல்வித் துறை திட்டம்
பள்ளி மாணவ, மாணவிகள் மத்திய, மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை பெறவும், வங்கி சேவைகளைப் பெறவும் ஆதார் எண் அவசியம். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஆதார் பதிவு செய்யப்படுகிறது. அதன் பின், 5 வயது முடிந்த பிறகும் பதிவு செய்ய வேண்டும்.மேலும், 10, 15, 18 வயது மற்றும் 22 வயது ஆகிய கால இடைவெளிகளில் கைவிரல் ரேகை மற்றும் விழித்திரை மறுபதிவு செய்து ஆதாரினை தொடர்ந்து புதுப்பித்தல் அவசியம்.ஆதார் மறுபதிவிற்கு பெற்றோர், தங்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, தாலுகா அலுவலகம், தபால் நிலையங்கள், குறிப்பிட்ட சில வங்கிகளில் உள்ள ஆதார் பதிவு மையங்களை நோக்கிச் செல்கின்றனர். ஆனால், தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டோக்கன், கூட்ட நெரிசல் போன்றவற்றால், ஆதார் புதுப்பித்தல் பணியில் தொய்வு ஏற்படுகிறது. இதனால், பள்ளி செல்லும் மாணவ மாணவியர் பாதிக்கப்படுகின்றனர்.இப்பிரச்னையை தவிர்க்கும் பொருட்டு தமிழகத்தில் அரசு, அரசு உதவிப் பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் நேரடியாக ஆதார் புதுப்பிக்கும் வகையில் ஆதார் மையங்களை அமைக்க பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.அதன்படி, மாவட்டம் வாரியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டு தற்போதைய தகவலின் அடிப்படையில் ஆதார் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.கடலுார் மாவட்டத்தில் கடலுார், விருத்தாசலம் என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளது. மாவட்டத்தில் 2,228 அரசு, அரசு உதவிப் பெறும் மற்றும் தனியார் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.மாவட்டத்தில் அண்ணாகிராமம், கடலுார், கம்மாபுரம், காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, மங்களூர், மேல் புவனகிரி, நல்லுார், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, நெய்வேலி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட 14 வட்டாரங்கள் உள்ளது.ஒவ்வொரு வட்டாரத்திலும் பள்ளிகளின் எண்ணிக்கைகேற்ப இல்லம் தேடி கல்வி திட்டப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, ஆதார் புதுப்பித்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டத்தில் 4.50 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு தற்போதைய கைவிரல் ரேகை மற்றும் விழித்திரை அடிப்படையில் ஆதார் புதுப்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், 1.50 லட்சம் பேருக்கு ஆதார் புதுப்பித்தல் பணிகள் முடிவடைந்துள்ளது.மீதமுள்ள 3 லட்சம் பேருக்கு புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இப்பணியை 2 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆதார் புதுப்பித்தல் பணியில் இல்லம் தேடி கல்வி பணியாளர்கள் 26 பேர் ஈடுபட்டுள்ளனர் ' என்றார்.