அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள்... தேவை
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் கூடுதலாக டாக்டர்கள் நியமித்து, கிராமப்புற நோயாளிகளுக்கு24 மணி நேர சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும்.விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் பொது மருத்துவம், மகப்பேறு, காது, மூக்கு தொண்டை, பல், முடநீக்கியல் மற்றும் சித்தா உள்ளிட்ட பிரிவுகளில் தினசரி 2,000 பேர் புறநோயாளிகளாகவும், 200க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.இங்கு, 1.80 கோடி ரூபாயில் அதிநவீன சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, இ.சி.ஜி., மற்றும் டயாலிசிஸ் இயந்திரங்கள் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தம் சுத்திகரிப்பு, சிறுநீர், ரத்த பரிசோதனை வசதிகள் உள்ளது.மேலும், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக முதல்வர் காப்பீடு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.டாக்டர்கள், செவிலியர்களுக்கு உறுதுணையாக சுமீட் என்ற தனியார் நிறுவன பணியாளர்கள் மூலம் பாதுகாப்பு மற்றும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படுவதால், மருத்துவமனை வளாகம் துாய்மையாக பராமரிக்கப்படுகிறது. இருப்பினும் கூடுதல் கட்டட வசதியின்றி நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் சிரமமடைந்து வருகின்றனர்.இதனை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், 2 ஆண்டுகளுக்கு முன் 1.50 கோடி ரூபாயில் கண் மருத்துவ பிரிவுக்கு கூடுதலாக புதிய கட்டடம் கட்டப்பட்டது.தற்போது, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கோரிக்கையின்படி, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் 5 கோடி ரூபாயில், லிப்ட் வசதியுடன் கூடிய ஐந்து அடுக்கு கட்டடம் கட்டப்படுகிறது.இதில் பார்க்கிங், டயாலிசிஸ், முடநீக்கியல் பிரிவில் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு வார்டு, அறுவை அரங்குகள், ரத்த வங்கி ஆகியன செயல்பட உள்ளன. மேலும், கனிம வள நிதியின் கீழ் 4.4 கோடி ரூபாயில், ஏற்கனவே உள்ள 24 மணி நேர அவசர சிகிச்சை கட்டடத்தின் மேல் பகுதியில் ஒரு தளமும், அதனருகே உள்ள தீவிர இருதய சிகிச்சை பிரிவு கட்டடத்தின் மேல்புறம் இரண்டு தளங்களும் கட்டப்பட்டு வருகிறது.இதனால் 400 முதல் 500 நோயாளிகள் வரை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு நிகராக தங்கி சிகிச்சை பெற முடியும். ஆனால், போதிய டாக்டர்கள் இல்லாததால் மருத்துவ ஊழியர்கள், நோயாளிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். இதனால் காலை முதல் இரவு வரை நோயாளிகளுடன் வரும் உறவினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, மருத்துவ உபகரணங்களை சூறையாடும் அவலம் தொடர்கிறது.விருத்தாசலம், திட்டக்குடி, மங்கலம்பேட்டை, நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர் பகுதி நெடுஞ்சாலைகளிலும், ரயில் விபத்துகளில் சிக்குவோருக்கு முதலுதவி சிகிச்சை தரப்படுகிறது. எனவே, முழுநேர அவசர சிகிச்சை பிரிவை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். இதனால் படுகாயமடைந்த நபர்கள் சிதம்பரம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவது தவிர்க்கப்படுவதுடன், வழியில் இறக்கும் நிலை தடுக்கப்படும். சிறப்பு டாக்டர்கள் தேவை
இரு ஆண்டுகளுக்கு முன் 1.50 கோடி ரூபாயில் கண் மருத்துவப்பிரிவுக்கு கட்டடம் கட்டியும் இதுநாள் வரை மருத்துவர் நியமிக்கப்படவில்லை. அதுபோல், தோல் சிகிச்சைக்கு ஒரு டாக்டரும்; குழந்தைகள் நலன், மகப்பேறு, ரேடியாலஜி பிரிவுகளில் தற்போது ஒன்றிரண்டு டாக்டர்கள் மட்டுமே பணியில் இருப்பதால் கூடுதலாக டாக்டர்கள் நியமனம் செய்து, 24 மணி நேர சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பு அவசியம்
விபத்து, விஷம் அருந்தியது, நெஞ்சுவலி ஆகிய நோயாளிகளுடன் வரும் உறவினர்கள், டாக்டர்கள் இல்லாததால் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மேலும், உள் நோயாளிகளின் உடமைகளுக்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளது. எனவே, 24 மணி நேரமும் சீருடை அணிந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.எனவே, விருத்தாசலம் மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிப்பதுடன், பாதுகாப்பை உறுதி செய்து கிராமப்புற ஏழை நோயாளிகள் துரித சிகிச்சை பெற மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.