சம்பா நடவுப்பயிர்கள் பாதிப்பு வேளாண் அதிகாரிகள் ஆய்வு
புவனகிரி: மேல்புவனகிரி வட்டாரத்தில் சம்பா நடவுப்பயிர்கள் பாதிப்பு குறித்து, வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புவனகிரி அருகே கொளக்குடி, வடதலைகுளம், தென் தலைதளம் உள்ளிட்ட கிராமங்களில் பூச்சி நோய் தாக்குதல் குறித்து விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். இதன்தொடர்ச்சியாக கடந்த இரு தினங்களாக மேல்புவனகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார், மண்டல ஆராய்ச்சி நிலைய அலுவலர் இராஜபாஸ்கர், உதவி வேளாண்மை அலுவலர் சிங்காரமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது நெல் பயிரில் கருப்பு வண்டு தாக்குதல் மற்றும் இலைசுருட்டுப்புழு, குருத்துப்பூச்சி தாக்குதல் காணப்பட்டது. இதை கட்டுப்படுத்த புரோபனோபாஸ் 50 சதவீதமும், ECமருந்தினை 400 மில்லி அளவில் ஒரு ஏக்கருக்கு கைத்தெளிப்பான் அல்லது பேட்டரி தெளிப்பான் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினர்.