மின்கம்பி உதவியாளர் தகுதி காண் தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு
கடலுார் : மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்வுக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: 2025ம் ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மின் கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்து தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளர்களிடமிருந்தும், இத்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின் கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்களிடமிருந்தும் மற்றும் தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சார பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் மின்ஒயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இத்தேர்விற்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை http://skilltraining.tn.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை துணை இயக்குநர், முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கடலுார் என்ற முகவரிக்கு வரும் 17ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.