மனஉறுதி இருந்தால் வில்வித்தை கை வசம்; பயிற்சியாளர் கமலேஸ்வரன் உறுதி
கடலுார்; தமிழர்களின் பாரம்பரிய கலையான வில்வித்தையை கற்றுக்கொள்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என வில்வித்தை பயிற்சியாளர் கமலேஸ்வரன் தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது, வில்வித்தை நமது பாரம்பரிய கலைகளில் முக்கியமான ஒன்று. ஆதி மனிதர்கள் தங்கள் பாதுகாப்பிற்கும், உணவு தேவைக்கும் பயன்படுத்தியது வில் மற்றும் அம்பு. அன்று முதல் இன்று வரை நாம் இதனை பழகி வருகிறோம். பாதுகாப்பு ஆயுதம், பின் போர்க்கருவி, தற்போது விளையாட்டு உபகரணம். உலகளவில் சிறந்த விளையாட்டாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் வில் அம்பை பயன்படுத்தும் கரங்கள் குறைந்துவிட்டது என்பது வேதனைக்குரிய ஒன்று.வில்வித்தை பயில மனஉறுதி மிகவும் அவசியம். உடலின் சிறுஅசைவு கூட இலக்கை தவறவிடும். மனிதனின் வெற்றியை நோக்கிய பயணம் இலக்கை அடையும் வரை சிறிதும் திசை மாறாமல் அம்பு போல இருக்க வேண்டும். வெற்றி என்பது நேர்கோட்டில் சென்று புள்ளியை அடைவதாகும். இந்தியாவில் வில்வித்தை இந்திய வில், வளைவு வில், கூட்டுவில் என்ற மூன்று பிரிவுகளிலும், உலகளவில் ரீகர்வ் மற்றும் காம்பவுண்ட் வில் வகை பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.தனிநபர் மற்றும் குழு(3வீரர்கள்) போட்டியும் நடைபெறுகிறது. இதன் பயிற்சி 5மீட்டர் துாரம் முதல் 100மீட்டர் வரை கொண்டது. ஒலிம்பிக்கில் ரீகர்வ் போவ் 70மீட்டரும், காம்பவுண்ட் போவ் 50மீட்டர் துாரமும் இலக்காக உள்ளது. இலக்கில் வட்ட வடிவில் ஐந்து வண்ணங்கள் (வெள்ளை, கருப்பு, நீலம், சிகப்பு மற்றும் மஞ்சள் கொண்டதாகும்.) 12.2 செ.மீ., விட்டம் கொண்டதாகும். மத்தியிலிருந்து 10,9,8,7,6 என்று புள்ளிகள் அடிப்படையில் வெற்றியாளரை தேர்ந்தெடுப்பர். பார்வைத்திறன், உடற்தகுதி, நல்ல மனநிலை(மனஉறுதி), சிதறாத சிந்தனை ஆகியவை இருந்தால் வில்வித்தை உங்கள் வசம். இவ்வாறு அவர் கூறினார்.