குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் வெளியேற்றம் அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆய்வு
கடலுார்: கடலுாரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிநிற்கும் மழைநீர் வெளியேற்றும் பணியை, அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.கடலுாரில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் குடியிருப்புகளைச் சுற்றி மழை நீர் தேங்கி நின்றது. தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடக்கிறது. நேற்று காலை வெளி செம்மண்டலம் சூர்யா நகர் பகுதியில் மழை நீர் வெளியேற்றும் பணியை அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். மேலும் கோண்டூர், நத்தப்பட்டு பகுதியிலும் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், கோண்டூர் ஊராட்சி தலைவர் ஞானபிரகாசம், துணைத் தலைவர் சாந்தி பழனிவேல், ஊராட்சி செயலாளர் வேலவன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.