மாணவி கீழே விழுந்து காயம் பஸ் டிரைவர், கண்டக்டர் பணி நீக்கம்
கடலுார்:கடலுாரில் அரசு பஸ்சில் இருந்து மாணவி கீழே விழுந்து காயமடைந்த விவகாரம் தொடர்பாக தற்காலிக டிரைவர் மற்றும் கண்டக்டர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.கடலுார், வன்னியர்பாளையத்தைச் சேர்ந்தவர் இளம்பரிதி மகள் தர்ஷினிதேவி,19. கடலுார் அரசு கலைக் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.நேற்று மதியம் 1:45 மணிக்கு கல்லுாரியிலிருந்து பஸ் நிலையம் நோக்கிச் சென்ற அரசு பஸ்சில் ஏறினார். பண்ருட்டி அடுத்த கீழிருப்பை சேர்ந்த ரகோத்தமன் பஸ்சை ஓட்டினார். கடலுார் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மாணவி இறங்கும் போது, திடீரென டிரைவர் பஸ்சை இயக்கியதால், கீழே விழுந்து காயமடைந்தார்.கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவிக்கு நெற்றி, தாடை, பின் தலை உள்ளிட்ட பகுதியில் 7 தையல்கள் போடப்பட்டன. டிரைவர் பஸ்சை அலட்சியமாக இயக்கியதாக, மாணவி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.கடலுார், தேவனாம்பட்டிணம் போலீசார், டிரைவர் ரகோத்தமன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.இச்சம்பவம் குறித்து கடலுார் போக்குவரத்து கழக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மாணவி பஸ்சிலிருந்து இறங்கும் முன்பே பஸ்சை டிரைவர் இயக்கியது தெரிந்தது. அதனைத் தொடர்ந்து, தற்காலிக டிரைவர் ரகோத்தமன், கண்டக்டர் ஜெயபால் இருவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.