ஓடும் பஸ்சில் டிரைவருக்கு நெஞ்சுவலி
புவனகிரி: புவனகிரியில் அரசு பஸ்சில் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், பயணிகளை பாதுகாப்பாக இறக்கி விட்டு, மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் இருந்து சிதம்பரத்திற்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் வந்தது. பஸ்சை பத்திரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த டிரைவர் சிவக்குமார், 47; ஓட்டிவந்தார். புவனகிரி அருகே பஸ் வந்தபோது டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டிரைவர், பஸ்சை சாதுர்யமாக ஓட்டிவந்து புவனகிரி பஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு மயங்கி விழுந்தார். அவரை, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். புவனகிரி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். அரசு பஸ் டிரைவரின் சாதுர்யத்தால், பஸ்சில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பின்றி தப்பினர்.