கடலுார் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
கடலுார்: கடலுார் தென்பெண்ணையாறு, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாத்தனுார் அணையில் இருந்து நேற்று மாலை 6:00 மணியளவில், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவு நிரம்பியதால், கொள்ளிடம் ஆற்றில் 30,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கக்கூடும் என நீர்வளத்துறை அறிவித்துள்ளது. எனவே, அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர்வரத்து காரணமாக, கடலுார் மாவட்டத்தில் தென்பெண்ணையாறு, கொள்ளிடம் ஆற்றின் கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திடமிருந்து மறு அறிவிப்பு வரும் வரையில், நீர்நிலைகளுக்கு அருகில் செல்வது மற்றும் ஆற்றில் குளிக்க செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் மழை சம்பந்தமான புகார்கள் மற்றும் உதவிக்கு கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, தொலைபேசி எண். 04142 - 220700, 290325, 290326, 290327 ஆகிய எண்களிலும். வாட்ஸ்ஆப் வாயிலாக 94899 30520 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம்.