ஆலை புகையால் பாதிப்பு கலெக்டரிடம் புகார் மனு
கடலுார்: நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் புகையால், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக, கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.கடலுார் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில், நெல்லிக்குப்பம் புதிய வர்த்தகர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கொடுத்துள்ள மனு;நெல்லிக்குப்பம் நகரில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலையால் காற்று மாசு, தண்ணீர் மாசு, துர்நாற்றம், சுகாதார சீர்கேடு, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், விபத்துக்கள் என பல பிரச்னைகள் இருந்து வருகிறது. சில தினங்களாக ஆலையில் இருந்து வெளியேறும் புகை மிகவும் குறைந்த உயரமுள்ள புகைப்போக்கி மூலம் வெளியேற்றுவதால், குடியிருப்புகளில் புகை படிகிறது. இதனால், சுவாசக் கோளாறு, கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஆலையில் கலெக்டர் பார்வையிட்டு, மக்களை பாதிப்பில்லாத சுற்றுச்சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.