தொடர் மழை எதிரொலி நெல் அறுவடை பாதிப்பு
புதுச்சத்திரம்,: புதுச்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் மழையால் குறுவை பட்ட நெல் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. குறுவை பருவம் ஜூன் - ஜூலை மாதங்களில் துவங்கி செப்.,- அக்., மாதங்களில் முடிவடையும். புதுச்சத்திரம் மற்றும் ஆலப்பாக்கம், மேட்டுப்பாளையம், தானுார், சம்பாரெட்டிப்பாளையம், தீர்த்தனகிரி, சிறுபாலையூர், பெரியப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பெருமாள் ஏரி பாசனம் மூலமாகவும், மணிக்கொல்லை, அலமேலுமங்காபுரம், பூவாலை, அத்தியாநல்லுார், வேளங்கிப்பட்டு உள்ளிட்ட பகுதி விவசாயிகள் போர்வெல் மற்றும் வாய்க்கால் நீர் மூலம், குறுவை பட்டத்திற்கு ஆண்டுதோறும், நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு இப்பகுதிகளில் 1,000 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெல் அறுவடை செய்யும் பணி, துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக, இப்பகுதியில் மழை பெய்வதால் வயல்களில் தண்ணீர் தேங்கி, அறுவடை செய்ய முடியாமல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.