மேலும் செய்திகள்
வெள்ளாற்றில் மணல் திருட்டு அதிகரிப்பு
14-May-2025
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் இருந்து வெளியூருக்கு மணல் கடத்தி சென்ற லாரியை கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவியது.பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம், செம்பேரியில் உள்ள வெள்ளாற்றங்கரையோரம் நபார்டு நிதி 17 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பில் 600 மீட்டர் துாரத்திற்கு வெள்ள தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள் இங்கிருந்து மணல் கடத்திச் செல்வதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கடந்த மாதம் 28ம்தேதி வெளியூர் மற்றும் வெளிமாவட்ட பணிக்கு மணல் கடத்திய லாரியை கிராம மக்கள் சிறைபிடித்தனர். போலீசார் பேச்சு வார்த்தைக்கு பின், லாரி விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், மணல் திருட்டை தடுக்கக் கோரி இன்று (13ம்தேதி) இரு கிராம மக்கள் பெண்ணாடம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதற்காக நேற்று பகல் 2:30 மணிக்கு பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் போலீசார், கிராம மக்கள் பேச்சு வார்த்தை நடந்தது. அதில், வரும் 16ம்தேதி வரை வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு மணல் எடுத்துச் செல்லக்கூடாது என ஒப்பந்த பணியாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு அனைத்து தரப்பும் ஒப்புக்கொண்டதால் இன்று நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதற்கிடையே, பேச்சு வார்த்தையை மீறி, மாலை 5:00 மணிக்கு மீண்டும் வெள்ளாற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தி செல்வதை அறிந்த கிராம மக்கள் லாரியை பிடித்தனர். தகவலறிந்து வந்த பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் வருவாய், பொதுப்பணித்துறையினர் கிராம மக்களிடம் சமாதானம் பேசி சமாதானம் செய்தனர். இதனையேற்று இரவு 7:15 மணிக்கு லாரியை விடுவித்து கலைந்து சென்றனர்.
14-May-2025