உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எம்.எல்.ஏ.,க்கள் கையில் டெண்டர் முடிவு தலைமை உத்தரவால் கவுன்சிலர்கள் அதிருப்தி

எம்.எல்.ஏ.,க்கள் கையில் டெண்டர் முடிவு தலைமை உத்தரவால் கவுன்சிலர்கள் அதிருப்தி

தமிழகம் முழுதும் உள்ள உள்ளாட்சிகளில் அந்தந்த பகுதிக்கு ஏற்றார் போல் வளர்ச்சி திட்டப் பணிகளை தமிழக அரசு ஒதுக்கி அதற்கான நிதியையும் வழங்கி வருகிறது. திட்டப் பணிகளுக்கான டெண்டர்கள் மாநகர, நகராட்சி, பேரூராட்சி மன்ற கூட்டங்களில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி வழங்குவார்கள். டெண்டர் விவகாரங்களில் கூட்டணி கட்சிகள் எம்.எல்.ஏ.க்கள் எந்த பலனும் கிடைக்காததால் தி.மு.க.,தலைமை மீது வருத்தத்தில் இருந்தனர். சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை திருப்திப்படுத்த தி.மு.க., தலைமை புதிய வழியை அதிரடியாக கொண்டு வந்துள்ளது. அதன்படி, உள்ளாட்சிகளில் விடப்படும் அனைத்து டெண்டர்களும் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் மூலமே விட வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். மாவட்ட தலைநகருக்கு அருகில் உள்ள நகராட்சி கவுன்சிலர்கள் தி.மு.க., தலைமையின் இந்த உத்தரவால் அதிருப்தியடைந்தனர். இதையடுத்து பெரும்பாலான கவுன்சிலர்கள் துறை அமைச்சரை சந்தித்தனர். அப்போது எம்.எல்.ஏ.,க்கள் பல வழிகளில் பயனடைகின்றனர். எனவே, எங்கள் விஷயத்தில் தலையிட வேண்டாமென, கேட்டுக் கொண்டனர். இதுவரை உங்கள் விருப்பப்படியே செயல்பட்டீர்கள். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் மூலமே டெண்டர் முடிவு செய்யப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை என, அமைச்சர் கறாராக கூறி விட்டாராம். இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய கவுன்சிலர்கள், கட்சியின் இந்த முடிவு சட்டமன்ற தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தபோகிறது என்பது தெரியவில்லையே என, வாடிய முகத்துடன் திரும்பி வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி