கடலுார் அரசு கல்லுாரியில் நாளை கலந்தாய்வு துவக்கம்
கடலுார்: கடலுார் அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை துவங்குகிறது என, கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூறியுள்ளார். அவரது செய்திக்குறிப்பு: கடலுார் அரசு கல்லுாரியில் 2025-26ம் கல்வியாண்டிற்கு நாளை 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களான மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், தேசிய மாணவர் படை, பாதுகாப்பு படை வீரர்கள் வாரிசு போன்றவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கு 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை மொழிப்பாடம் தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வு காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை நடக்கிறது. கலந்தாய்விற்கு வரும் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ள அசல் கல்வி சான்றிதழ்கள், சாதி சான்று, பாஸ்போட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, வங்கி கணக்கு பாஸ் புத்தகம், பதிவிறக்கம் செய்த விண்ணப்ப படிவம் உள்ளிட்ட ஆவணங்கள் அசல் மற்றும் 3 ஜெராக்ஸ் காப்பியுடன் எடுத்து வர வேண்டும்.