பொங்கல் முடிந்து புறப்பட்ட மக்கள் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்
கடலுார்: கடலுார் பஸ் நிலையத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.தமிழகத்தில் கடந்த 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை பொங்கல் பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்காக சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்தனர்.பொங்கல் விடுமுறை முடிந்து ஆற்றுத்திருவிழா மற்றும் வார விடுமுறை நேற்றுடன் முடிந்தது.இதனால், கடலுார், சிதம்பரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் விடுமுறை முடிந்து நேற்று சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு புறப்பட்டனர்.பயணிகளின் வசதிக்காக கடந்த 4 நாட்களாக சென்னைக்கு மட்டும் தினந்தோறும் கடலுார் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 250 பஸ்கள் இயக்கப்பட்டது. அதை தொடர்ந்து, நேற்று கடலுார் மாவட்டத்தில் இருந்து சென்னை, சேலம், திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல அந்தந்த பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களில் மக்கள் குவிந்தனர்.மேலும், நேற்று வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், 125 அரசு சிறப்பு பஸ்கள் மற்றும் அரசு சார்பில் 30 தனியார் பஸ்கள் சென்னைக்கு இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு ஏறி பயணம் செய்தனர்.