உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் மாவட்டமா... வேண்டாம்... வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அலறல்

கடலுார் மாவட்டமா... வேண்டாம்... வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அலறல்

கடலுார் மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம் ஆகிய இடங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரி தலைமையில் செயல்படும் அலுவலகமும், கடலுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பகுதி நேர அலுவலகங்கள் பண்ருட்டி, நெய்வேலியிலும் செயல்படுகிறது. இதேப் போன்று, சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பகுதி நேர அலுவலகமாக விருத்தாசலம் அலுவலகம் இயங்கி வருகிறது. கடலுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 2 கிரேடு- 1 இன்ஸ்பெக்டர்கள், 2 கிரேடு- 2 இன்ஸ்பெக்டர்கள், வட்டார போக்குவரத்து அதிகாரி ஆகிய 5 அலுவலர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது இருப்பது ஒரே ஒரு கிரேடு-1 இன்ஸ்பெக்டர் மட்டுமே. மீதியுள்ள 4 பதவியிடங்கள் காலியாக உள்ளன. பகுதி நேர அலுவலகத்தில் கிரேடு-1 இன்ஸ்பெக்டர் பதவியில் இருப்பார். கடலுாரில் கடந்த 2023ம் ஆண்டுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி 'ரெய்டில்' வட்டார போக்குவரத்து அதிகாரி சிக்கினார். அப்போது முதல் கடலுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அதிகாரிகள் யாரும் பொறுப்பேற்க வருவதில்லை. கடலுார் என்றாலே அய்யோ... வேண்டாம்... எனக் கூறி வருவதற்கே தயக்கம் காட்டுகின்றனர். இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வட்டார போக்குவரத்து அதிகாரி இல்லாமலேயே மாவட்டத்தின் தலைநகரம் இயங்கி வருகிறது. சிதம்பரம் வட்டார போக்குவரத்து அதிகாரியே கடலுார் அலுவலகத்தை பொறுப்பு அதிகாரியாக கவனித்து வருகிறார்.வட்டார போக்குவரத்து அதிகாரி பணியிடம் காலியாக இருப்பதால் லைசென்ஸ் இல்லாமல் ஓட்டும் டிரைவர்கள், பேட்ஜ் போடாமல் பணியாற்றும் நடத்துனர்கள், மாநகரத்திற்குள் விதி மீறும் வாகனங்கள், என ஏராளமாக உள்ளன. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த வாகனங்கள் சோதனை செய்வது அவசியம். இனியாவது அரசு விழித்துக்கொண்டு புதிய வட்டார போக்குவரத்து அதிகாரியை நியமிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை