உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விடிய விடிய சூறை காற்றுடன் பேய் மழை; வெள்ளக்காடானது கடலுார் மாவட்டம் மின்சாரம் துண்டிப்பு; போக்குவரத்து நிறுத்தம்; 12 ஆயிரம் ஏக்கர் பயிர் பாதிப்பு

விடிய விடிய சூறை காற்றுடன் பேய் மழை; வெள்ளக்காடானது கடலுார் மாவட்டம் மின்சாரம் துண்டிப்பு; போக்குவரத்து நிறுத்தம்; 12 ஆயிரம் ஏக்கர் பயிர் பாதிப்பு

'பெஞ்சல்' புயல் கரையை நெருங்கியபோது கனமழை கொட்டியதில் கடலுார் மாவட்டம் வெள்ளக்காடானது. பல இடங்களில் மரங்கள் விழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்தன.வங்கக்கடலில் உருவாகன பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதலே மழை பெய்யத் துவங்கியது. இரவு காற்றுடன் மழை தீவிரமானது. கன மழை காரணமாக கடலுார் மாநகராட்சி பகுதி களில் குண்டு சாலை, ஜட்ஜ் பங்களா ரோடு, வண்ணாரப்பாளையம் நான்கு முனை சந்திப்பு, சீத்தாராம் நகர் மின்வாரிய அலுவலகம், லோகம்மாள் கோவில் தெரு ஆகிய இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விழுந்த மரங்கள் நேற்று மதியம் வரை அப்புறப்படுத்தப்படவில்லை.பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதில், மைதானம் சாலை, பீச் ரோடு ஆகிய இடங்களில் இடுப்பளவு தண்ணீர் ஓடியது.கடலுார் அருகே உள்ள மலை கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, காற்றின் வேகத்தால் ஒடிந்து சேதமானது. பப்பாளி மரங்கள் முறிந்த விழுந்தன. வாழை போன்ற பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. நெல் நடவு முழுதும் தண்ணீரில் மூழ்கின.மாவட்டம் முழுதும் நெல், கரும்பு, வாழை, பப்பாளி என 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்தன.மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. அந்தந்த பகுதி களின் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

மின்சாரம் துண்டிப்பு

கடலுார் மாநகராட்சி, சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, கிள்ளை, நெல்லிக்குப்பம், சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடி, வடலுார், குள்ளஞ்சாவடி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் மாலை முதல் மின்சாரம் தடைபட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கிராமப் பகுதிகளில் மின் மோட்டார்களை இயக்க முடியாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. நேற்று மாலை வரை பெரும்பாலான பகுதிகளுக்கு மீண்டும் மின் வினியோகம் வழங்கப்படவில்லை.

போக்குவரத்து பாதிப்பு

கடலுார் உட்பட பல்வேறு இடங்களில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டன. அதுமட்டுமின்றில் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.மாவட்டம் முழுதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

அமைச்சர் ஆலோசனை

அமைச்சர் பன்னீர்செல்வம், பெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சாலைகள், மேம்பாட்டு திட்ட இயக்குனர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோருடன் புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, கமிஷனர் அனு, எஸ்.பி., ராஜாராம் உடனிருந்தனர். -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை