துணை முதல்வர் விழா ஏற்பாடுகள்; கடலுாரில் அமைச்சர் ஆலோசனை
கடலுார் ; துணை முதல்வர் உதய நிதி, வரும் 25ம் தேதி கடலுார் மாவட்டத்திற்கு வருவதை முன்னிட்டு, அமைச்சர் பன்னீர்செல்வம் முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை நடத்தினார்.கடலுார் சுற்றுலா மாளிகையில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா உடனிருந்தனர்.தொடர்ந்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிட தேர்வு செய்யப்பட்டுள்ள கடலுார், திருப்பாதிரிப்புலியூர் செயிண்ட் ஜோசப் பள்ளி அரங்கத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது:தமிழக துணை முதல்வர் உதயநிதி, அனைத்து மாவட்டத்திலும், அரசு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, வரும் 25 ம் தேதி கடலுார் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்கிறார். பல்வேறு துறைகளின் வாயிலாக அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார். குறிப்பாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் கடலுார் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கிறார் என, தெரிவித்தார்.ஆய்வின் போது நகராட்சி கமிஷனர் அனு, கூடுதல் கலெக்டர் சரண்யா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.