உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லுாரி இருந்தும் பயனில்லை பிரேத பரிசோதனைக்கு விழுப்புரம் செல்லும் அவலம்

கடலுார் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லுாரி இருந்தும் பயனில்லை பிரேத பரிசோதனைக்கு விழுப்புரம் செல்லும் அவலம்

விருத்தாசலம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக மாற்றி அறிவிக்கப்பட்டது. இங்கு பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், டாக்டர்கள் மற்றும் அனைத்து துறைகளிலும் ஊழியர்கள் உள்ளனர். கொலை மற்றும் சந்தேக மரண வழக்கில் உடலை பிரேத பரிசோதனை இங்கு செய்வதில்லை. மாறாக, விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் அவலம் தொடர்கிறது. கொலை, சந்தேக மரணம் போன்ற வழக்குகளில் சட்ட மருத்துவத்துறையில் படித்த பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்வது வழக்கம். இவர்களால் தடயங்களை எளிதில் கண்டறிய முடியும். சிதம்பரத்தில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரியில் சட்ட மருத்துவத் துறையில் படித்த பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் இருந்தும், விழுப்புரத்திற்கு உடல்களை அனுப்பி வைக்கும்போது, அங்கு பணிபுரிவோரிடம் பெரும் வாக்குவாதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் இருந்து மாதத்திற்கு 30 உடல்கள் வரையில் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், பிரேத பரிசோதனைக்கு பரிந்துரை கடிதத்துடன் செல்லும் போலீசாரும் அலைகழிக்கப்படுகின்றனர். கடலுார், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி, பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு வாகன செலவு, உணவு என பல ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படுகிறது. தவிர, வழக்கமான பணிகளுக்கு இடையே, கடலுார் மாவட்டத்தில் இருந்து வரும் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்வதால், அங்கு பணிபுரிவோருக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. எனவே, சிதம்பரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரியில் கொலை, சந்தேக மரண வழக்கில் உடல் பிரேத பிரசோதனை செய்ய வேண்டும். இதற்காக, மருத்துவக் கல்லுாரியில் இருந்து 1 கி.மீ., தொலைவில் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கை பயன்படுத்தலாம். இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை