உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அமைச்சர் நேரு வருகையால் குஷி மேற்கு மாவட்ட தி.மு.க.,வினர் சுறுசுறுப்பு

அமைச்சர் நேரு வருகையால் குஷி மேற்கு மாவட்ட தி.மு.க.,வினர் சுறுசுறுப்பு

கடந்த சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் காங்., மாஜி தலைவர் அழகிரி மூலம் அக்கட்சியின் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் களமிறங்கினார்.இது தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும், தங்கள் கட்சி ஆட்சி அமைய வேண்டி காங்., வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட்டனர். வரும் 2026 தேர்தலில் தி.மு.க., நேரடியாக களமிறங்கும் என அக்கட்சியினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், சிட்டிங் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் 'நானே மீண்டும் களமிறங்குவேன்' என தெரிவித்து, விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் 1 கோடி ரூபாய்க்கு வீட்டையும் வாங்கியுள்ளார்.இந்நிலையில், தி.மு.க., தீவிர உறுப்பினர் சேர்க்கை, அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நிர்வாகிகளை முடுக்கி விட்டுள்ளது. அதற்கேற்ப தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து, கட்சிப் பணிகளை கண்காணித்து வருகிறது. மேலும், பல மாவட்டங்களை ஒருங்கிணைத்து, மண்டலம் வாரியாக மூத்த அமைச்சர்களை நியமித்துள்ளது. திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலுார் மேற்கு மாவட்டங்கள் அடங்கிய மண்டல பொறுப்பாளராக அமைச்சர் நேரு நியமிக்கப்பட்டார்.அமைச்சர் நேருவின் வருகை, மேற்கு மாவட்ட தி.மு.க.,வினருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கோபத்தை காட்டாத உள்ளூர் அமைச்சர் கணேசனும்; வெற்றி வாகை சூடுவதிலும், வாரி வழங்குவதிலும் பெயர் பெற்ற நேருவும் இணைந்திருப்பது 'டபுள் தமாக்கா' என அக்கட்சி நிர்வாகிகள் நம்புகின்றனர். நேற்று முன்தினம் பண்ருட்டி, காடாம்புலியூரில் அமைச்சர் நேரு தலைமையில் மேற்கு மாவட்ட பூத் ஏஜன்ட், பாகநிலை முகவர்கள், கிளை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.இன்று திட்டக்குடி தொகுதியில் பொதுக்கூட்டம், விருத்தாசலம் நகரில் 33 வார்டுகளிலும் இல்லம் தேடிச் சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. அமைச்சர் கணேசனுக்கு பெயர் பெற்றுத் தர கடந்த காலங்களில் அயராது உழைத்த நிர்வாகிகள், இம்முறை நேருவுடன் இணைந்து பணியாற்றுவதால் சுறுசுறுப்படைந்துள்ளனர்.பல ஆண்டுகளாக கூட்டணி கட்சிகளுக்கு தாரை வார்த்து, அவர்களை வெற்றி பெறச் செய்தது போதும். வரும் தேர்தலில் தி.மு.க.,வே நேரடியாக களமிறங்க மண்டல பொறுப்பாளர் நேரு உறுதுணையாக இருப்பார் என நம்பிக்கையுடன் தி.மு.க.,வினர் களத்தில் இறங்கி பம்பரமாக வேலை செய்ய துவங்கி விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை