தொகுதியை பெற தி.மு.க., வியூகம் விருதையில் தொண்டர்கள் மகிழ்ச்சி
விருத்தாசலம் சட்டசபை தொகுதியில், கடந்த 1996 - 2001 சட்டசபை தேர்தலில் குழந்தை தமிழரசன் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின், தி.மு.க.,வினர் எம்.எல்.ஏ.,வாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், கூட்டணி கட்சியான காங்., அதனை தட்டிப்பறித்தது. இது தி.மு.க.,வினரிடம் அதிருப்தியை கொடுத்தாலும், கூட்டணி தர்மத்தின்படி, காங்., வேட்பாளர் ராதாகிருஷ்ணனை வெற்றி பெற வைத்தனர். இதனால், வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளரே களமிறங்க வேண்டும் என அக்கட்சியினர் உறுதியாக உள்ளனர். அதற்கேற்ப, நகர, ஒன்றிய, பேரூராட்சியில் கிளை பொறுப்பாளர்கள், ஓட்டுச்சாவடி முகவர்களை உசுப்பேற்றி, களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விருத்தாசலம் தொகுதி பொறுப்பளாராக நியமிக்கப்பட்டுள்ள அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் ஆதரவாளர் குலோத்துங்கன், தி.மு.க.,வுக்கே தொகுதியை ஒதுக்க வேண்டும் என தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். உள்ளூர் நிர்வாகிகளும், பொறுப்பாளரின் ஓட்டத்திற்கு ஏற்ப, வாக்காளர்களை சந்தித்து, சாதனைகளை பட்டியலிட்டு வருகின்றனர். இது தவிர, அக்கட்சித் தலைமைக்கும் தி.மு.க., செல்வாக்கு மற்றும் எதிரணியில் யாரெல்லாம் போட்டியிட வாய்ப்புள்ளது என வேட்பளர்கள் பட்டியலை தயாரித்து, உறுதியாக வெற்றி பெறலாம் என அறிக்கையாக சமர்ப்பித்துள்ளனர். உள்ளூர் நிர்வாகிகள் போட்டிக்கு தயாராக உள்ளதால், தலைமையும் தவிர்க்காது என உறுதியாக நம்புகின்றனர். விருத்தாசலம் தொகுதியை கூட்டணிக்கு தி.மு.க., தாரை வார்க்காது என்பதால், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.