உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சத்துணவு கூடங்களில் தீ விபத்து ஆய்வு நடத்த எதிா்பார்ப்பு

சத்துணவு கூடங்களில் தீ விபத்து ஆய்வு நடத்த எதிா்பார்ப்பு

தமிழக பள்ளி கல்வித்துறை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் நலன் கருதி காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இப்பணியில், சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் தாய் சமையல் பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தியது. அதன்படி, காலையில் மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மகளிர் திட்ட அதிகாரிகள் மூலம் காலை உணவு, வழங்கும் நேரம் ஆகியவை கண்காணிக்கப்படுகிறது. சத்துணவு சமையல் கூடங்களிலேயே இதற்கென சிலிண்டர், அடுப்பு, குக்கர் உள்ளிட்ட தளவாடப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில், விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கடந்த மாதம் மதிய சத்துணவு சமைத்த போது காஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், காப்பாற்றச் சென்ற சமையலர் மகன் ஆகியோர் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்றனர். காலை உணவுத் திட்டத்தில் வழங்கிய ஒற்றை இரும்பு அடுப்புக்கு செல்லும் ரெகுலேட்டர் டியூப் தரமில்லாத காரணத்தால் சிதைந்து, காஸ் கசிவு ஏற்பட்டது விசாரணையில் தெரிந்தது. அதே கூடத்தில் மேலும் பல சிலிண்டர்கள் இருந்தபோது தீயணைப்புத்துறையினரின் சாதுர்யமான செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தற்போது, கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில், பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட காஸ் நிறுவன ஊழியர்களுடன் சென்று சமையல் கூடத்தில் காஸ் சம்பந்தமான தளவாடப்பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும். தரமில்லாத பொருட்களை அகற்றிவிட்டு, தரமான சாதனங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் வரும் கல்வியாண்டில் விபத்துகளை தவிர்க்க முடியும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி, சோதனையை தீவிரப்படுத்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !