கடலுாரை பேரழிவு பாதித்த மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை: குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டு
கடலுார்: கடலுார் மாவட்டத்தை இயற்கை பேரழிவு பாதித்த மாவட்டமாக மத்திய அரசு அறிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.கடலுார் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகளுக்கான குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்தும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களில் மாதவன், ரவீந்திரன், சரவணன், முருகானந்தம், காந்தி ஆகியோர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தில் பேசியதாவது:சாத்துார் அணை மற்றும் வீராணத்திலிருந்து ஒரே நேரத்தில் அதிகளவில் திறந்து விடப்பட்டதால் கடலுார் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அதிகாரிகள் தவறே இதுபோன்ற பாதிப்புக்கு காரணம். பண்ருட்டியில் இருந்து தாழங்குடா வரை உள்ள கெடிலம், தென்பெண்ணை ஆற்று கரைகளை பலப்படுத்த வேண்டும். நெல்லிக்குப்பம் முதல் தாழங்குடா வரை கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும்.கடலுார் மாவட்டத்தை இயற்கை பேரழிவு பாதித்த மாவட்டமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். வெள்ளத்தால் வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 50,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.மாவட்டத்தை குடிசை இல்லா மாவட்டமாக மாற்றுவதும், அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டும் திட்டத்தில் 5 லட்சம் செலவில் வீடு கட்டி கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். முழுமையாக பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்.இயற்கை சீற்றத்தால் பாதிப்பிற்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு அளவுக்கு ஏற்ப முழு நிவாரணம் வழங்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் நத்தப்பட்டு முதல் தாழங்குடா வரை கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும். அரசூர் தடுப்பணை தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அந்த அணையை உயர்த்தி கட்ட வேண்டும்.விவசாய நிலங்களில் விதைத்த மணிலா, உளுந்து, தட்டைப் பயிறு ஆகியவற்றை மயில்கள் மேய்ந்து விடுகிறது. இதனால், விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்படுகிறது. மயில்களை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் பேசினர்.கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பதிலளித்து பேசுகையில், மாவட்டத்தில் 1 லட்சத்து 95ஆயிரத்து 863 குடும்ப அட்டைகளுக்கு வெள்ள நிவாரண தொகை, பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 1 கிலோ சர்க்கரை வழங்கும் பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இங்கு விவசாயிகள் முன்வைத்து கோரிக்கைள் பரிசீலனை செய்யப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், வேளாண் இணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார், கலெக்டர் நேர்முக உதவியாளர் கதிரேசன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.