உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெஞ்சல் புயல் நிவாரணம் கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம்! சொந்த செலவில் நிலத்தை தயார் செய்யும் பாிதாபம்

பெஞ்சல் புயல் நிவாரணம் கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம்! சொந்த செலவில் நிலத்தை தயார் செய்யும் பாிதாபம்

கடலுார் : பெஞ்சல் புயல் பாதிப்பால் சேதமான பயிர்களுக்கு அரசின் நிவாரணம் கிடைக்காமல், கடலுார் மாவட்டத்தில் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.கடலுார் மாவட்டத்தில், 2.5 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கிய வடகிழக்கு பருவமழை, டிசம்பரில் வீசிய பெஞ்சல் புயல் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணானது. குறிப்பாக தென் பெண்ணையாறு, கெடிலம் ஆகியவற்றில் வந்த வெள்ள நீரால் பல ஏக்கர் விவசாய நிலங்களில் பெரும் பள்ளங்கள் விழுந்தும், பல ஆயிரம் ஏக்கர் நிலம் மண் மேடிட்டும் போனது.மழையால் பயிர் பாதிப்பு குறித்து வேளாண், வருவாய், புள்ளியியல் துறை மூலமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து, பயிர் சேத விபரங்கள் சரிபார்க்கப்பட்டன. பின்னர், கலெக்டர் மூலமாக இந்த அறிக்கை தமிழக அரசின் வருவாய் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதேபோல், கனமழையால் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு, ஹெக்டருக்கு 17,000 ரூபாய், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதத்திற்கு 22,500 ரூபாயும், மானாவாரி பயிர்களுக்கு 8,500 ரூபாயும் வழங்கப்படும்' என, கடந்த டிச., 3ம் தேதி அரசு அறிவித்தது. மேலும், வேளாண் பொறியியல் துறை மூலமாக பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை சமன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக, நிலத்தில் ஏற்பட்ட பெரிய பள்ளங்களை கணக்கீடு செய்யும் பணி நடந்தது. ஆனால், 2 மாதங்களாகியும் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு வேளாண் பொறியியல் துறையினர் திரும்பிக்கூட பார்க்கவில்லை.வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டம் என்பதால், கண்டிப்பாக நிவாரண தொகை விரைவில் கிடைக்கும் என, மாவட்ட விவசாயிகள் பெரும் நம்பிக்கையில் இருந்தனர். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, பயிர் நிவாரணம் விடுவிக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.பயிர் பாதிக்கப்படும் என்பதைக் கணித்து, மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடும் செய்யப்பட்டது. ஆனால் காப்பீடு மூலமாக இதுவரை எந்த பணமும் அரசு விடுவிக்கவில்லை. கடலுார் மாவட்டத்தை பொறுத்தவரையில், பயிர் பாதிப்பு நிவாரணம் கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட நிலங்களை சொந்த செலவிலேயே சமன்படுத்தி தயார் செய்யும் வேதனை நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி