கடலுாரில் குட்கா விற்ற 7 கடைகளுக்கு அபராதம்
கடலுார் : கடலுாரில் கல்வி நிறுவனங்களைச் சுற்றி புகையிலைப் பொருட்கள் விற்ற 7 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கடலுார், செம்மண்டலம் பகுதியில், கல்வி நிறுவனங்களை சுற்றியுள்ள கடைகளில் விதிகளை மீறி புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக கலெக்டருக்கு புகார்கள் சென்றது. கலெக்டர் உத்தரவின்படி, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் அபிநயா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், போலீசார் சம்பவ இடததில் உள்ள பெட்டி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விதிகளை மீறி கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீ., சுற்றளவிற்குள் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 7 கடைகளுக்கு 2,500 ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். மேலும் இரண்டு கடைகளில் இருந்து தடைசெய்யப்பட்ட 6 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.