புதுச்சத்திரம் கடற்கரையில் ஒதுங்கிய மிதவை சாதனம்
கடலுார்; கடலுார் அருகே கடற்கரையில் மிதவை சாதனம் (போயா) ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டை கடற்கரையில் நேற்று காலை, மஞ்சள் நிறத்தில் மிகப்பெரிய உருண்டை வடிவிலான பொருள் மிதந்தது. இதை பார்த்த கிராம மக்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். புவனகிரி தாலுகா வருவாய்த் துறையினர் மற்றும் புதுச்சத்திரம் போலீசார் விரைந்து வந்து, சுமார் நான்கு அடி உயரமுள்ள மிதவை சாதனத்தை கைப்பற்றினர். அதில், 'மினிஸ்டரி ஆப் பாரின் அபைர்ஸ் மற்றும் ரிபப்ளிக் ஆப் மாலத்தீவுகள்' என, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. விசாரணையில் அது, கப்பலில் பயன்படுத்தப்படும் வழிகாட்டும் மிதவை சாதனமான 'போயா' என்பது தெரிய வந்தது. புவனகிரி தாலுகா வருவாய் துறை அதிகாரிகள் மிதவையை கைப்பற்றி, தாலுகா அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரல் வடிவிலான மிதவை போயா இதே பகுதியில் ஒதுங்கியது.இதுகுறித்து கடல்சார் அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகையில், 'போயா'க்கள் பெரும்பாலும் கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ளதை தெரிவிக்கவும், வழிகாட்டவும் மற்றும் பாறைகள், ஆழமான பகுதிகளை காண்பிக்கவும் பயன்படுத்தப்படும். தற்போதைய காலங்களில் போயாக்களில் நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பொருத்தப்பட்டு பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது. கரை ஒதுங்கிய மிதவையை ஆய்வு செய்த பின்னரே, அது எதற்காக பயன்படுத்தப்பட்டது என தெரிய வரும்'' என்றனர்.