மேலும் செய்திகள்
போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி
01-Nov-2025
கடலுார்: வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலுார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக டி.என்.பி.எஸ்.சி., டி.என்.யு.எஸ்.ஆர்.பி., மற்றும் டி.ஆர்.பி., போன்ற தேர்வு முகமைகளால் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் நுாலக வசதி உள்ளது. இத்தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் அதிக அளவிலான மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்ட மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 2, 2ஏ -ல் அடங்கிய பணிகளுக்கான முதல்நிலை தேர்வு 28ம் தேதி நடந்தது. இதனைத்தொடர்ந்து, தொகுதி 2, 2ஏ முதன்மைத் தேர்விற்கான தமிழ் தகுதித்தேர்வு, தொகுதி 2 ல் உள்ள விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வு, தொகுதி 2ஏ, பகுதியில் உள்ள கொள்குறிவகை எழுத்து தேர்வு ஆகியவற்றிற்கு இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 10ம் தேதி முதல் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை எண்.8, ஆற்றங்கரைத்தெரு, புதுப்பாளையம், நியூ சினிமா தியேட்டர் எதிரில் உள்ள கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் வாரத்தேர்வுகள் நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகளும் வழங்கப்படவுள்ளது. கடலுார் மாவட்டத்தினை சேர்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
01-Nov-2025