அடிக்கடி நிறுத்தப்படும் அரசு பஸ்: விவசாயிகள் அவதி
நடுவீரப்பட்டு : குறிஞ்சிப்பாடி-சென்னை செல்லும் அரசு பஸ் அடிக்கடி நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிஞ்சிப்பாடியில் இருந்து பத்திரக்கோட்டை, நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், சாத்திப்பட்டு, பண்ருட்டி வழியாக சென்னைக்கு அரசு பஸ் (தடம் எண் 161) அதிகாலை இயக்கப்படுகிறது. பத்திரக்கோட்டை, சி.என்.,பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் விவசாய பொருட்களை எடுத்துச் செல்லவும், பொதுமக்கள் தங்களின் அத்தியவாசிய தேவைக்கும் இந்த பஸ்சை நம்பி உள்ளனர். பஸ்கள் அடிக்கடி வருவதில்லை. இதனால், குறிப்பிட்ட நேரத்திற்கு எங்கும் செல்ல முடியவில்லை. பல மணி நேரம் காத்திருந்தும் மக்கள் ஏமாற்றமடைகின்றனர். இதனால், வேறு வழியின்றி மாற்று வாகனங்களில் கூடுதல் செலவு செய்து விவசாய பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்ல வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பஸ்சை தொடர்ந்து இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.