திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலனை கரம்பிடித்த காதலி
பண்ருட்டி; பண்ருட்டியில் 9 ஆண்டாக காதலித்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய இருந்த காதலனை, போராடி காதலி திருமணம் செய்து கொண்டார்.பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு வெள்ளைக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ், 30; தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியை சேர்ந்தவர் தீபா,25; இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயராஜிக்கு வேறு இடத்தில் பெண் நிச்சயித்து திருமண ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்தனர். இதையறிந்த காதலி தீபா, பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சுந்தரி விசாரணை நடத்தி, ஜெயராஜ் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை வழங்கினார். இதனையடுத்து தீபாவை ஜெயராஜ்க்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது.