வடலுார் வார சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடு விற்பனை
கடலுார்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வடலுார் வார சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.கடலுார் மாவட்டம், வடலுாரில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. இங்கு வடலுார், காடாம்புலியூர், குறிஞ்சிப்பாடி, மருவாய், கருங்குழி, பண்ருட்டி, சேத்தியாதோப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் வெள்ளாடு, செம்மறி, கொடி வகை ஆடுகளை விற்பனை செய்வர்.காணும்பொங்கல் அன்று அசைவம் சாப்பிடும் வழக்கம் உள்ளதால், வடலுார் வாரச்சந்தையில் நேற்று முன்தினம் இரவு முதல் 4000க்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர். 6 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது. நேற்று ஒரே நாளில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.