உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தண்டுவட எலும்பு நசுங்கிய மூதாட்டிக்கு அரசு டாக்டர்கள் ஆபரேஷன் செய்து சாதனை

தண்டுவட எலும்பு நசுங்கிய மூதாட்டிக்கு அரசு டாக்டர்கள் ஆபரேஷன் செய்து சாதனை

விருத்தாசலம், : கேன்சர் கட்டியால் தண்டுவட எலும்பு நசுங்கி, வலியால் அவதிப்பட்ட மூதாட்டிக்கு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.வடலுார் அடுத்த கல்லுக்குழி கிராமத்தை சேர்ந்தவர் சக்கரை. விவசாயி. இவரது மனைவி கொளஞ்சி, 50; இவர், கடந்த 7 மாதங்களாக தண்டுவட பாதிப்பால் நிற்கவும், நடக்கவும் முடியாமல் படுத்த படுக்கையில் அவதியடைந்தார்.கடலுார், புதுச்சேரி மருத்துவமனைகளுக்கு சென்றும் பயனில்லை. கடந்த இரு வாரங்களுக்கு முன், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த அவரை, தலைமை மருத்துவர் சாமிநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் எம்.ஆர்.ஐ., ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை செய்ததில், தண்டுவடத்தின் 2வது எலும்புக்குள் வலது புறமாக 5க்கு 3 செ.மீ., அளவில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.அங்கிருந்து எடுக்கப்பட்ட தசை மாதிரியை (பயாப்சி) 'பெத்தாலஜி' பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் கேன்சர் கட்டி என்பது உறுதியானது. இதையடுத்து முடநீக்கியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ராம்குமார், கோவிந்தராஜ், ஆனந்த், மயக்க மருந்து நிபுணர் தேவானந்த், செவிலியர்கள் சக்திபிரேமா, தமிழரசி, உதவியாளர்கள் தங்கதுரை, வெற்றிவேல் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை செய்து, நசுங்கிய எலும்பை சரி செய்தனர்.தலைமை மருத்துவர் சாமிநாதன் கூறுகையில், 'கொளஞ்சிக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது. தற்போது நடந்து செல்லும் நிலைக்கு முன்னேறியுள்ளார். கேன்சர் பாதிப்புக்கு சிகிச்சை பெற பரிந்துரை செய்யப்படுவார்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி