அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கேள்விக்குறி மருத்துவ ஊழியர்கள், நோயாளிகள் அச்சம்
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தினசரி 1,500க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், 200க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு, அதி நவீன சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே, இ.சி.ஜி., டயாலிசிஸ் பிரிவு, ரத்த வங்கி செயல்படுகிறது. திட்டக்குடி, வேப்பூர், மங்கலம்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், மந்தாரக்குப்பம் மற்றும் அரியலுார் மாவட்ட எல்லையான ஆண்டிமடம் பகுதியில் இருந்தும் சிகிச்சைக்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு, இரவு நேரங்களில் நோயாளிகளின் உறவினர்கள், பார்வையாளர்களால் அவ்வப்போது தகராறு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டதால், நோயாளிகள் முதல் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.சமீபத்தில் இரவு நேர சிகிச்சையின்போது உள்நோயாளியான பெண் ஒருவரின் உறவினர் தகராறில் ஈடுபட்டதை கண்டித்து, மருத்துவ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இன்ஸ்பெக்டர் முருகேசன் நேரில் சென்று, அவர்களை சமாதானம் செய்தார்.கடந்த வார இறுதியில், விபத்தில் இறந்த வாலிபரின் உறவினர்களால் மருத்துவமனை கண்ணாடி கதவுகளை அடித்து சேதப்படுத்தினர். நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் உயிரிழப்புக்கு சரியான சிகிச்சை அளிக்காததே காரணம் என, உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர்.அரசு மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகளை பெறுவது சவாலான நிலையில், அங்குள்ள உபகரணங்களை சேதப்படுத்துவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் கூடுதல் போலீசாரை நியமித்து, மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.