உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குவாரியில் கிராவல் மண் விலை... உயர்வு; மாவட்டத்தில் வீடு கட்டுவோர் தவிப்பு

குவாரியில் கிராவல் மண் விலை... உயர்வு; மாவட்டத்தில் வீடு கட்டுவோர் தவிப்பு

கடலுார், ஜூலை 30- கடலுார் மாவட்டத்தில் கிராவல் மண் விலை திடீரென உயர்ந்ததால்வீடு கட்டுவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடு கட்டுவதற்கு மணல் மிக முக்கியமானது. ஆனால், தற்போது மணல் குவாரி செயல்படாததால் மணல் லோடு வாங்க முடியவில்லை. அதற்கு பதிலாக எம்.சான்ட் பயன்படுத்தி கட்டுமானப்பணியை முடிக்கின்றனர். அதுவும் தரமாக இருப்பதாக கூறப்படுகிறது. வீடு கட்டுவதற்கு கடைக்கால் போட்ட பின்னர் வீட்டிற்குள் மணல் நிரப்புவதற்கு பதிலாக செம்மண் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும், பள்ளமான பகுதியில் மனைப்பிரிவு இருந்தால் மழைநீர் தேங்காத வகையில் உயரமானதாக்க செம்மண் கொட்டப் படுகிறது. காரணம் முன்பெல்லாம் ஒரு லோடு 3 ஆயிரம் முதல் 3,500 ரூபாய் தான் விலை போனது. அதனால் வீடு கட்டுபவர்கள், விவசாயிகள், சாமானிய மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். தற்போது சூழ்நிலை அடியோடு மாறிவிட்டது. தற்போது கிராவல் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டதால் சாமானிய மக்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கடலுார் மாவட்டத்தில் கேப்பர் மலையை யொட்டிதான் கிராவல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. உயரமான மலையை வெட்டியெடுத்து தரைமட்டமாக்குவதால் செம்மண்ணும் கிடைக்கிறது. பின், சம தரையான பிறகு நல்ல விளை நிலமுமாகிறது. கடலுார் மாவட்டத்தில் நடுவீரப்பட்டு, விலங்கல்பட்டு, வளையமாதேவி, எம்.புதுார் ஆகிய இடங்களில் 15க்கும் மேற்பட்ட கிராவல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. நான்கு யூனிட் மண் ஏற்றும் லாரிகளில் செம்மண் நிரப்ப 3,700 ரூபாய், மாமூல் தொகை 1,500 ரூபாய் என மொத்தம் 5, 200 ரூபாய் செலவாகிறது. இத்துடன் லாரி வாடகை சேர்த்து வாங்க வேண்டும். அதேப் போன்று, 6 யூனிட் லாரியாக (டாரஸ்) இருந்தால் 9,000 ரூபாய் செலவாகிறது. இதுதவிர லாரி வாடகை தனியாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி வாகன வாடகை சேர்த்தால் ஒரு லோடு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேலாகிறது. இதை விட மேலும் ஒரு தொகையை போட்டால் ஆற்று மணல் அல்லது சவுடு மணல் வைத்துக் கொள்ளலாம் என, வீடு கட்டுபவர்கள் கருதுகின்றனர். சாலை அமைக்கும் பணியில் அதிகளவில் செம்மண் பயன்படுத்தி வந்தனர். மண் இறுகுத்தன்மை அதிகாரிப்பால் குவாரி மண், சாலைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது சாலையோரத்தில் மண் அணைப்பதற்கு செம்மண்ணுக்கு பதிலாக வீடுகள் இடித்த மண், உடைந்த ஜல்லி கற்கள் கொட்டி வருகின்றனர். இதனால் கிராவல் குவாரிகளில் செம்மண் லோடு விற்பனையாவது வெகுமாக குறைந்து விட்டது. இதற்கென டிப்பர் லாரி வைத்திருந்த பலர், லோடு கிடைக்காததால் லாரியை விற்பனை செய்து விட்டனர். கிராவல் மண் விலை குறைந்தால்தான் ஏழை, எளிய மக்கள் வீடு கட்டுவதற்கு இம்மண்ணை பயன்படுத்த முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை