உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபரின் தொடைக்குள் புகுந்த ேஹண்டில் வெயிட் : சிடி ஸ்கேன் ஆஞ்சியோ முறையில் அகற்றம்

வாலிபரின் தொடைக்குள் புகுந்த ேஹண்டில் வெயிட் : சிடி ஸ்கேன் ஆஞ்சியோ முறையில் அகற்றம்

விருத்தாசலம் : சாலை விபத்தில் வாலிபரின் தொடைக்குள் நுழைந்து ரத்தக்குழாயை சிதைக்கும் வகையில் இருந்த பைக் உதிரி பாகத்தை, விருத்தாசலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் குமார்,22; இவர் கடந்த 15ம் தேதி தனது நண்பரான காட்டுக்கூடலுார் வாசுதுரை, என்பவருடன் பைக்கில் அரியலுார் மாவட்டம் ஓலையூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு புறப்பட்டார்.கருவேப்பிலங்குறிச்சி - ஜெயங்கொண்டம் சாலையில், டி.வி.புத்துார் அருகே சென்றபோது, எதிரே வந்த கார் மீது மோதியது. இதில் பைக்கை ஓட்டிச்சென்ற குமார் படுகாயமடைந்து, விருத்தாசலம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். வாசுதுரை லேசான காயங்களுடன் தப்பினார்.அதில், குமாரின் வலது தொடையில் (13க்கு 3.2 செ.மீ.,) இருந்த பெரிய காயத்தில் இருந்து அதிக ரத்தப்போக்கு இருந்தது. எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில், தொடையில் இருந்து முட்டிக்கு பின்புறமாக 4 அங்குலத்தில் இரும்பு துண்டு ஒன்று இருந்தது.தலைமை மருத்துவர் சாமிநாதன் தலைமையில், மருத்துவர் (ரேடியாலஜி) பிரியதர்ஷினி, 'சிடி ஸ்கேன்' மூலம் சோதனை செய்ததில், காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்க்கு அருகில் இரும்பு துண்டு இருந்தது. அதனை அகற்றா விட்டால் காலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது உறுதி செய்யப்பட்டது.தொடர்ந்து, நேற்று காலை 10:00 மணிக்கு, மருத்துவர்கள் (மயக்க மருந்து) முத்துக்குமார், (எலும்பு முறிவு அறுவை நிபுணர்கள்) ராம்குமார், ஆனந்த் மற்றும் செவிலியர்கள், அறுவை அரங்க ஊழியர்கள் அடங்கிய குழுவினர், சிடி ஸ்கேன் ஆஞ்சியோ முறையில் காலுக்குள் இருந்த இரும்பு துண்டை வெளியே எடுத்தனர்.தலைமை மருத்துவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறுகையில், 'சிடி ஸ்கேன் மூலம் சோதனை செய்ததில் 'ேஹண்டில் வெயிட்' எனப்படும் ேஹண்டில் பாரில் உள்ள இரும்பு துண்டு, சாலை விபத்தில் தொடையின் முன்பகுதியில் நுழைந்து பின்பகுதிக்கு சென்று, ரத்தக்குழாயுடன் உரசியதால், அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தோம்.மருத்துவமனையில் சிடி ஸ்கேன் ஆஞ்சியோ எனப்படும் அதிநவீன முறையில் அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல் முறை. மருத்துவக்குழுவினரின் தீவிர முயற்சியால் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, குமார் நலமுடன் உள்ளார். இந்த இரும்புத் துண்டு எப்படி உள்ளே சென்றது என தெரியவில்லை.குமாரும், அவரது உறவினர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால், இது சாத்தியமானது. மேலும், ஒரு சிறிய அளவிலான இரும்புத் துண்டு எலும்பை ஒட்டியபடி உள்ளது. அதனால் பாதிப்பு இருக்காது என்றாலும், இந்த காயம் ஆறிய பின்னர், அதனையும் அகற்ற உள்ளோம். இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாக வாய்ப்புள்ளது' என்றார். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த மருத்துவக் குழுவினருக்கு உறவினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி