உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் ஹவாலா பணம் பறிமுதல் அதிகரிப்பு! தேர்தல் செலவுக்காக என சந்தேகம்

கடலுாரில் ஹவாலா பணம் பறிமுதல் அதிகரிப்பு! தேர்தல் செலவுக்காக என சந்தேகம்

கடலுார்; கடலுார் சோதனைச்சாவடியில் தொடர்ந்து ஹவாலா பணம் பிடிபடுவது அதிகரித்து வருகிறது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு செலவு செய்வதற்காக அரசியல் கட்சியினரால் எடுத்துச்செல்லப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. புதுச்சேரியில் இருந்து மதுபான கடத்தலை தடுப்பதற்காக கடலுார் மாவட்ட எல்லையில் ஆல்பேட்டை, சாவடி, வெள்ளப்பாக்கம் உட்பட பெண்ணையாற்றங்கரையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா என போலீசார் ஆல்பேட்டையில் தீவிர சோதனை செய்த பின்பே வாகனத்தை விடுவிக்கின்றனர். போலீசார் சோதனையின்போது, பெரும்பாலும் மதுபாட்டில்கள்தான் பிடிபடுவது வழக்கம். ஒரு சில நேரங்களில் கார், ஆம்னி பஸ் ஆகியவற்றை சோதனையிடும் போது ஹவாலா பணமும் சிக்குவது உண்டு. கடந்த சில மாதங்களாக ஹவாலா பணம் பிடிபடுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஏப்., 23ம் தேதி வாகன சோதனையின்போது, சென்னையில் இருந்து மன்னார்குடி செல்லும் ஆம்னி பஸ்சில் எடுத்து வந்த 40 லட்சம் ரூபாய் தொகை பிடிபட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதையடுத்து கடந்த மே 31ம் தேதி இரவு சென்னையில் இருந்து நாகப்பட்டினம் சென்ற பென்ஸ் காரை சோதனை செய்தபோது 50 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் 4ம் தேதி இரவு தனியார் ஆம்னி பஸ்சில் 35 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் இருந்தது தெரியவந்தது. போலீசார் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 3 மாதத்தில் மட்டும் இவ்வளவு ஹவாலா பணம் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இன்னும் போலீசாரிடம் பிடிபடாமல் செல்லும் பணம் எவ்வளவு இருக்கும் என எண்ணிப்பார்க்க முடியவில்லை. சோதனைச் சாவடியில் வாகன சோதனை தொடர்ந்து நடந்த வண்ணம் தான் உள்ளது. ஆனால் இந்த தருணத்தில் மட்டும் அதிகளவு ஹவாலா பணம் பிடிபடுவது ஏன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதங்களே நாட்களே உள்ளன. இதற்காக, பல்வேறு அரசியல் கட்சிகள் முன்கூட்டியே பணத்தை வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பாக பதுக்கி வைக்க எடுத்துச் செல்லப்படுகிறதா என, பொது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது. போலீசார் கைப்பற்றிய ஹவாலா பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு மேல் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில்தான் பணம் யாருடையது என்பது தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை