என்.எல்.சி.,யில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 22 லட்சம் மோசடி; : 3 பேர் மீது வழக்கு
கடலுார்: என்.எல்.சி.,யில் வேலை வாங்கித் தருவதாக கூறி 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம், இருப்புக் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் அந்தோணிராஜ், 35; இவருக்கு உறவினர் மூலம் ஊமங்கலம் அடுத்த சமுட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவரின் அறிமுகம் கிடைத்தது.அவர் என்.எல்.சி., நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், 12 லட்சம் ரூபாய் கொடுத்தால் என்.எல்.சி.,யில் வேலை வாங்கித் தருவதாகவும், ஜான் அந்தோணிராஜியிடம் கூறினார்.அதன்பேரில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் 2 தவணைகளாக 12 லட்சம் ரூபாயை ஜான் அந்தோணிராஜ் கொடுத்ததும், பணி நியமன ஆணையை அன்பழகன் கொடுத்ததார்.ஜான் அந்தோணிராஜ் என்.எல்.சி., கார்ப்பரேட் அலுவலகத்தில் பணி நியமன ஆணையை காண்பித்த போது, அது போலி எனத் தெரிந்தது.இதனால் அவர் பணத்தை திருப்பிக் கேட்டபோது, அன்பழகன் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.ஊமங்கலம் அடுத்த புது தெற்கு வெள்ளூரைச் சேர்ந்தவர் அன்புச்செல்வன், 27; இவருக்கு என்.எல்.சி.,யில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அவரிடமும் சமுட்டிக்குப்பம் அன்பழகன், அவரது உறவினர்கள் பாலகிருஷ்ணன், அன்புராஜ் ஆகியோரிடம் அன்புச்செல்வன் 10 லட்சம் ரூபாய் கொடுத்தார். பணத்தை பெற்று ஒரு ஆண்டு ஆகியும் வேலை வாங்கித் தராமல் கொலை மிரட்டல் விடுத்தனர்.ஜான் அந்தோணிராஜ், அன்புச்செல்வன் அளித்த புகார்களின்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, அன்பழகன், பாலகிருஷ்ணன், அன்புராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.