கிராமங்களில் நாய்க்கடி அதிகரிப்பு; தடுப்பூசி தேடி தவிக்கும் அவலம்
விருத்தாசலம் : விருத்தாசலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நாய்க்கடி தடுப்பூசி போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும்.மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்டது, விருத்தாசலம் உட்கோட்டம். விருத்தாசலம், திட்டக்குடி நகராட்சிகள், மங்கலம்பேட்டை, கங்கைகொண்டான், பெண்ணாடம் பேரூராட்சிகள் மற்றும் விருத்தாசலம், மங்களூர், நல்லுார், கம்மாபுரம் ஒன்றியங்களை சுற்றி 250க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.சமீபகாலமாக நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகள் குறைந்ததால் வீதிகள் தோறும் அவைகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. வேகமாக செல்லும் பைக்குகள், ஓடி விளையாடும் சிறுவர்கள் மற்றும் கடைகளுக்கு சென்று வரும் பெண்கள், முதியோரை கடித்து அச்சுறுத்துகின்றன.இதனால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. நாய்க்கடியால் பாதித்தவர்கள் ரேபிஸ் நோய் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்கின்றனர்.ஆனால், ஒரு ஊசி மருந்து மூலம் குறைந்தது ஐந்து பேருக்கு மருந்து எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், மீதமுள்ள மருந்து வீணாகும் என்பதால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனைக்கு ஊசி போட அனுப்பி வைக்கப்படுகின்றனர்.இதனால் ஒரு நாள் ஊதியத்தை விட்டு, 1 மணி நேரம் பயணித்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. இதேப் போன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து நாய்க்கடி பாதித்த நபர்கள் படையெடுப்பதால், இங்கு அதிகளவு ஊசிமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.மாதந்தோறும் குறிப்பிட்ட அளவை தாண்டி, ஊசிமருந்துகளை பயன்படுத்துவதால் விரைவில் தீர்ந்து, நகரில் உள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்த தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.எனவே, கிராம மக்களின் நலன் கருதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடி பாதித்த நபர்களுக்கு தடுப்பூசியை பயன்படுத்தவும், நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.