இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம்
கடலுார்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என, கடலுார் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கலைவாணி கூறியுள்ளார். அவரது செய்திக்குறிப்பு: அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் 2018ம் ஆண்டு முதல் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு துவங்கி உள்ளனர். தமிழகத்தில் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை கணக்குகள், விவசாயிகளுக்கான பி.எம்.கிசான் கணக்குகள் என ஏராளமான கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. இதில், ஆரம்ப காலத்தில் துவங்கிய கணிசமான கணக்குகளில் வாரிசு நியமனம் செய்யப்படாமல் உள்ளது. சேமிப்பு கணக்கிற்கு வாரிசு நியமிப்பதன் மூலம், கணக்குதாரர் இறப்பிற்கு பிறகு கணக்கில் உள்ள தொகையை, வாரிசுதாரர்கள் எளிய முறையில் பெற முடியும். இதன்படி அனைத்து விதமான சேமிப்பு கணக்குகளிலும் வாரிசு நியமனம் செய்ய தேவையான வசதிகள் கடலுார் அஞ்சல் கோட்டம் முழுதும் உள்ள அஞ்சலகங்களில் உள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குடன், அஞ்சலக சேமிப்பு கணக்கை இணைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பணம் செலுத்தலாம். மேலும் பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ரூ.555/ரூ.755 பிரீமியத்தில் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான தனி நபர் விபத்து காப்பீடு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில் தெரிந்து கொள்ளலாம்.