இந்திய அளவிலான வேளாண் கண்காட்சி கடலுார் தோட்டக்கலைத்துறை சாதனை
விருத்தாசலம் : உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த இந்திய அளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்ந்த கண்காட்சியில், கடலுார் மாவட்ட தோட்டக்கலைத்துறை முதலிடம் பிடித்தது. உத்தரகாண்ட் மாநிலம், ஹரிதுவாரில், குலோபல் ஆப்பர்சூனிட்டிஸ் ெஹல்த் அன்ட் வெல்னஸ் அமைப்பு சார்பில் இமயமலை பகுதிகளை சார்ந்த வேளாண், தோட்டக்கலை, சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர் மற்றும் பாரத வளர்ச்சி, திட்டங்கள் குறித்த இந்திய அளவிலான கண்காட்சி, கடந்த 22 முதல் 24ம் தேதி வரை நடந்தது. தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கடலுார் மாவட்ட தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் அலெக்ஸ் தலைமையிலான குழு பங்கேற்று, வளங்களை காட்சிப்படுத்தும் வகையில், மலர் அலங்காரத்துடன் அரங்கம் அமைத்து, தோட்டக்கலை விளைபொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைத்தன. மேலும், இந்திய அளவில் தமிழ்நாடு தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பு நிலை, உற்பத்தி, நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு குறித்து கருத்துப்படங்கள் வைக்கப்பட்டன. குறிப்பாக, பண்ருட்டி பலாவில் செய்யப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வெட்டிவேர் மாலை உட்பட தோட்டக்கலை வளர்ச்சி முகமை தயாரித்து சந்தைப் படுத்தும் உற்பத்திப் பொருட் கள் வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியில், மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் அமைத்திருந்த அரங்குகள் முதலிடம் பிடித்து சாதனைபடைத்தது. இதற்கான சான்றிதழை உதவி இயக்குனர் அலெக்ஸ், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பழனிசாமி, சங்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.