ஊராட்சி தலைவரிடம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த மாத்துார் காலனியைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவரை, அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி தலைவர் சுப்ரமணியன் மகன் கலைவாணன், 28, என்பவர் ஜூன் மாதம் கொலை செய்தார்.இவ்வழக்கில், ஊராட்சி தலைவர் சுப்ரமணியன், அவரது மற்றொரு மகன் மணிமாறன் ஆகியோரையும் சேர்க்க கோரி போராட்டம் நடந்தது. இதையடுத்து, சுப்ரமணியன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மகன் மணிமாறன் வழக்கில் சேர்க்கப்படவில்லை.இந்நிலையில், இவ்வழக்கில் மணிமாறனை சேர்க்காமல் இருக்க, 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்த நிலையில், மீதமுள்ள, 1.50 லட்சம் ரூபாயை கேட்டு, மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மிரட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், முதல் குற்றவாளியான கலைவாணன் குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலையானார்.வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் அறிவுறுத்தலின்படி, இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை சஸ்பெண்ட் செய்து, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷா மிட்டல் உத்தரவிட்டார்.