நீண்ட கால கடன் தீர்வு திட்டம்: கூட்டுறவு சங்கம் அழைப்பு
கடலுார் : கூட்டுறவு சங்கங்களில் நீண்ட கால நிலுவை சிறப்பு கடன் திட்டத்தின் கீழ் நிலுவை கடன் தொகையை ஒரே தவணையில் செலுத்தி கடன்களை தீர்வு செய்து கொள்ளலாம் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன்கள் மற்றும் இதர நீண்டகால நிலுவை ஆகியவற்றிற்கான சிறப்பு கடன் திட்டம்-2023 செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ், கடனை தீர்வு செய்ய கடந்த செப்டம்பர் 12ம் தேதிக்கு முன் 25 சதவீதம் தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாதவர்கள், ஒப்பந்தம் மேற்கொண்டும் மீதமுள்ள 75 சதவீத தொகையை செலுத்தாதவர்களும் தற்போது மொத்த கடன் தொகையையும் 9 சதவீத வட்டியில் ஒரே தவணையில் செலுத்தி கடன்களை தீர்வு செய்து கொள்ளலாம்.இத்திட்டத்தின் கீழ் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முதல் முழுமையாக தவணை தவறிய 3 ஆண்டுகளுக்கு மேலான மத்திய கால வேளாண் கடன், பயிர்க் கடனாக வழங்கப்பட்டு, மத்திய கால வேளாண் கடனாக மாற்றம் செய்யப்பட்ட கடன்.பண்ணை சார்ந்த நீண்ட கால கடன்கள், சிறு தொழில் கடன்கள் மற்றும் தொழில் முனைவோர் கடன்களையும் தீர்வு செய்யும் நாள் வரையில் 9 சதவீத வட்டியுடன் நிலுவைத் தொகையை வரும் 2025ம் ஆண்டு மார்ச் 12ம் தேதிக்குள் ஒரே தவணையில் செலுத்தி தீர்வு செய்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.