மங்களூரில் மக்காச்சோள சாகுபடி விவசாயிகள்... கவலை; மழை பொய்த்ததால் பயிர்கள் கருகும் அபாயம்
சிறுபாக்கம்: வேப்பூர் அருகே பருவமழை பொய்த்ததால், மக்காச்சோள பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வேப்பூர் அடுத்த மங்களூர் ஒன்றியத்தில் சிறுபாக்கம், மலையனுார், மங்களூர், பாசார், மா.புதுார், எஸ்.புதுார், கொத்தனுார், மாங்குளம், அடரி, பட்டாக்குறிச்சி, காஞ்சிராங்குளம், ஒரங்கூர், வள்ளிமதுரம், சித்தேரி, வடபாதி, அரசங்குடி, விநாயகனந்தல், பாசார் உட்பட 90 கிராமங்களில் மானாவாரி நிலங்கள் அதிகளவில் உள்ளன. இந்த நிலங்களில் மக்காசோளம், வரகு, பருத்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஜூலை கடைசியில் அல்லது ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் பருவமழையை நம்பி முன்கூட்டியே விவசாயிகள் நிலத்தை உழவு செய்து அடியுரம் இட்டு களைக்கொல்லி தெளித்து தயார் நிலையில் வைத்திருப்பர். நடப்பாண்டில் மானாவாரி விவசாயிகள் அவ்வப்போது பெய்த லேசான மழையை நம்பி கடந்த 20 நாட்களுக்கு முன்பு 50,000 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் விதைகளை நடவு செய்தனர். ஆனால், பயிர்கள் துளிர்விட்ட நிலையில், 20 நாட்களுக்கும் மேலாகவே கடுமையான வெயிலினால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த இரண்டு மாதங்களாகவே மங்களூர் வட்டார வேளாண் மையங்களில் மக்காச்சோளம் விதை, இயற்கை உரம், நானோ யூரியா ஆகியவற்றை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கி வருகின்றனர். ஆனால், முளைப்பு திறன் சரியாக இருக்காது என்பதால் விவசாயிகள், விதைகளை வாங்க முன்வரவில்லை. இதனால், பெரும்பாலான உரங்கள், விதைகள் விற்பனை ஆகாமல் கிடப்பில் உள்ளன. மக்காச்சோளம் விதைகள், உரங்களை விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யுமாறு அதிகாரிகள் கூறுவதால் வேளாண் கள அலுவலர்கள் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து மானாவாரி விவசாயிகள் சங்கத் தலைவர் மணிகண்டன் கூறுகையில், 'நடப்பாண்டில் ஆடி, ஆவணியில் பெய்ய வேண்டிய பருவமழை புரட்டாசி வரை பெய்யவில்லை. பருவ காலம் கடந்து போன நிலையில், லேசான மழையை நம்பி, விவசாயிகள் இருக்கும் ஈரப்பதத்தை நம்பி மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். ஆனால் மக்காச்சோள விதை ஈரப்பதம் இல்லாததால் 50 சதவீதம் பயிர் முளைக்காமல் போய்விட்டன. தொடர்ந்து பருவமழை இல்லாததால் இருக்கும் பயிர்களும் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர்களை சாகுபடி செய்ய உழவு, உரம், விதைகள், ஆட்கள் கூலி என செலவு செய்த விவசாயிகள் கவலைடைந்துள்ளனர்' என்றார்.