மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி கூட்டம்: கவுன்சிலர்கள் வெளிநடப்பு
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் ஜெயமூர்த்தி தலைமையில் நடந்தது.செயல் அலுவலர் சண்முகசுந்தரி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.அர்ஜீனன் (அ.தி.மு.க): குடிநீர் குழாயை மூன்று அடி ஆழத்தில் புதைக்க வேண்டுமென டெண்டரில் உள்ளது. ஆனால் அரை அடி ஆழத்துக்கு குறைவாகவே பள்ளம் தோண்டி புதைக்கிறார்கள்.அதேபோல் வரவு செலவு கணக்கு வழங்காததை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.முத்துகிருஷ்ணன் (த.வா.க): பைப் லைன் போடும்போது சேதமாகும் சாலைகளை தற்காலிகமாக கூட சரி செய்யாததால் விபத்துகள் நடக்கிறது.இதுபோன்ற தவறுகளை சரி செய்யாததை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.தலைவர்: குடிநீர் பைப் போட டெண்டர் எடுத்த வர்களுக்கு அபராதம் விதித் துள்ளோம். கலெக்டரிடம் புகார் அளித்துள்ளோம்.அவர்களை கருப்பு பட்டியலில் சேர்க்க முடிவு செய்துள்ளோம்.மஞ்சுளா (சுயே): நமது பதவி காலமே விரைவில் முடிய உள்ளது.இதுவரை எனது பகுதியில் சாலைகள் போடாமல் குண்டும் குழியுமாக உள்ளது.வசந்தகுமார்(அ.தி.மு.க): குடிநீர் குழாய் பதிக்கும் போது குடிநீர் குழாய்களை அகற்றியதால் மக்கள் குடிநீருக்கு சிரமபடுகிறார்கள்.கூட்டம் நடக்கும்போதே கவுன்சிலர் அபிபாபீவியின் மகன் உள்ளே வந்து பாலாஜி நகரில் துாய்மை பணிகள் நடக்காததால் நோய் பரவும் அபாயம் உள்ளது என கூறினார். வெளிநபர்கள் கூட்டத்தில் பேச கூடாது. வெளியே செல்லுங்கள் என தலைவர் ஆத்திரமாக கூறியதால் பரபரப்பு நிலவியது.